நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!

நீட் தேர்வை ரத்து செய்ய துணை நில்லுங்கள் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நேற்றும் இன்றும் ஆளுநர்…

நீட் தேர்வை ரத்து செய்ய துணை நில்லுங்கள் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.  

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நேற்றும் இன்றும் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து என்று சொன்னீர்கள், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். நுழைவுத் தேர்வு உள்ளதா இல்லையா என்பதை சொல்லுங்கள்” எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை, பழனிசாமி முதலமைச்சரான பிறகு தான் நீட் தேர்வு நுழைந்தது. இதை யாராவது மறுக்க முடியுமா? தமிழ்நாட்டில் நீட் தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமி தான்” என்று குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை அவையில் எப்போதாவது சொல்லி இருக்கீறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “நீட் தேர்வை ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருகிறோம். அதிமுக, திமுக இணைந்தே தீர்மானம் நிறைவேற்றினோம். சட்ட மசோதா தாக்கல் செய்தோம். குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டனர்.  நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சித்து வருகிறோம். ஒரு முறைக்கு இரண்டு முறை அழுத்தமாக நீட் விலக்குக்காக பிரதமரிடம் பேசியிருக்கிறேன். மாணவர்களின் உயிர் பிரச்சினை என்பதால் நீதிமன்றத்தில் முறையாக அணுக உள்ளோம்” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து,  ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  நீட்டை பொறுத்தவரை விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி,  “நீட் தேர்விலிருந்து விலக்கு பெற துணை நிற்போம்” என்று கூறினார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.