திருடுவது என்று முடிவு செய்துவிட்டால், அது சின்ன பொருள், பெரிய பொருள் என்றெல்லாம் பார்ப்பதில்லை, மரியாதைக்குரிய திருடர்கள். இருந்தாலும் ரோடு ரோலரை எல்லாம் திருடுவார்கள் என்று அதன் உரிமையாளர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். பெங்களூரின் சந்திரா லே-அவுட்டில் உள்ள அருந்ததி நகரில் வசித்து வருகிறார். இவர் ரோடு ரோலரை சொந்தமாக வாங்கி, வாடகைக்கு விட்டு வருகிறார். கொரோனா காரணமாக வேலை ஏதும் இல்லாததால், நாகர்பவி பகுதியில் 80 அடி சாலையில் உள்ள காலி மைதானத்தில், அதை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் மே மாதம் 25 ஆம் தேதி அவருடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் தமிழ்நாட்டுக்கு வந்தார். லாக்டவுன் காரணமாக பெங்களூர் செல்ல முடியவில்லை. கடந்த 19 ஆம் தேதிதான் பெங்களூருக்குத் திரும்பினார். தனது ரோடு ரோலரை நிறுத்திய இடத்தில் தேடினால் காணவில்லை.
போலீசில் புகார் செய்தார், செல்வராஜ். அங்கிருந்த சிசிடிவி கேமரா துணையோடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பவன்குமார் என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது பகீர் தகவல்கள் கிடைத்தது. இந்த ரோடு ரோலரை, வினய் என்பவர் திருடி விற்க முடிவு செய்தார்.
இதற்காக இஸ்மாயில் என்பவரை தொடர்பு கொண்டார். ஆசை யாரை விட்டது? சரி என்றார் இஸ்மாயில். இரண்டு கிரேனை கொண்டு வந்து, பெரிய டிரெக் ஒன்றில் ரோடு ரோலரை ஏற்றி, இஸ்மாயிலின் இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு கிலோ 28 ரூபாய் என்று விலை பேசியுள்ளார் வினய். ரோடு ரோலரின் மொத்த எடை, 7,800 கிலோ. கேஸ் சிலிண்டர் கொண்டு, ரோடு ரோலரை மூன்று துண்டாக வெட்டியுள்ளனர். அடுத்தடுத்து வெட்டும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, போலீசார் சரியாக ஸ்பாட்டுக்கு சென்றனர். அதற்குள் இஸ்மாயிலும் வினய்யும் எஸ்கேப்.
பவனை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







