“காவலர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

காவலர் தாக்கியதில் விவசாயி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய…

காவலர் தாக்கியதில் விவசாயி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த செய்தி தன் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று மாலை முருகேசன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அங்கிருந்த காவலர்கள் தணிக்கை செய்ததாகவும், அப்போது அவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அதனால் காவலர், முருகேசனை தாக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது, முருகேசன் இறந்துவிட்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.