மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற…

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற தொண்டு நிறுவனம்
மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்டோரிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு 15 ஆயிரம் மாதம் சம்பளத்தில் ஆசிரியர் வேலை என கூறி பணி நியமனம் செய்துள்ளார். 

ஆனால் லூயிஸ் சில மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கிவிட்டு தொண்டு நிறுவனத்தில்
பணம் இல்லை என்று கூறி பணம் வழங்காமல் ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்த ஆசிரியர்கள் கடந்த ஜூலை மாதம் தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் என லூயிஸ் உறுதி கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை பணத்தை திரும்ப வழங்க லூயிஸ் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. மேலும் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட
கல்வித்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் லூயிசை கைது செய்து
பணத்தை திரும்ப பெற்றுத் தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராஜீவ் நகரில் அமைந்துள்ள லூயிஸ் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் உள்ளே அமர்ந்து
பணத்தை திருப்பித் தர வேண்டும் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.