கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 21 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் தயார் நிலையில் இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டு அங்கு தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு அங்கு கூடுதல் படுக்கைககள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேகமாக ரயில் பெட்டியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்னக ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும், மதுரை கோட்டத்தில் 21 பெட்டிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு ரயில் தயார் நிலையில் உள்ளது. இந்த கொரோனா சிறப்பு ரயிலில், படுக்கை வசதியுடன் தனி தனி அறை, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தயார் நிலையில் உள்ள இந்த சிறப்பு ரயில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு கேட்கும் பட்சத்தில் உடனடியாக ரயிலை தேவைப்படும் இடத்திற்கு அனுப்பி முடியும் எனத் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது







