என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், கற்பகம் பல்கலைக்கழக அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் வீழ்த்தியது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், ஶ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும அணியுடன், கற்பகம் பல்கலைக்கழக அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற கற்பகம் பல்கலைக்கழகம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் விளையாடியது. மழையால் மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததாலும், போட்டி தாமதமாக தொடங்கியதாலும், 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் 15 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கிருஷ்ண மூர்த்தி 57 பந்துகளில் 6 பவுண்டரி விளாசி 63 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கற்பகம் பல்கலைக்கழக அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி வரை போராடிய கற்பகம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் போக, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளிகளின் அடிப்படையில் பின்தங்கியிருந்ததால், இந்த தொடரில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் கிருஷ்ண மூர்த்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.








