நயன்தாரா நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். இதன் ஒரு ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு முன்பு, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
காதல் கதையான இதில், விஜய் சேதுபதி ஹீரோ. நடிகை சமந்தா இன்னொரு ஹீரோயின். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் சிவனுடன் இணைந்து லலித்குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷுட்டிங் ஐதராபாத், சென்னையில் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு நாளை வெளியிடுகிறது.









