நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இணைந்து திரைப்படத்தை கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், முதன்முதலாக இடைவெளி இல்லாத ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும், வரும் டிசம்பர் 22ஆம் தேதி, 300 திரையரங்குகளில் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும் கூறினார். குழந்தைகளை நயன்தாரா நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் விக்னேஷ் சிவன் கூறினார்.
முன்னதாக, நயன்தாரா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் திரையரங்கு முன்னர் குவிந்தனர். திரையரங்கு முன்பு இரும்பு தடுப்புகளை வைத்து ரசிகர்கள் உள்ளே நுழையாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இடைவேளை இல்லாமல் ’கனெக்ட்’ திரைப்படம் உருவாகியுள்ளதால், இப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், 300 திரையரங்குகளில் ’கனெக்ட்’ வெளியாகும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளதால் நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







