இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்ததது எப்படி என்பது பற்றி நடிகை நயன்தாரா முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில் நடித்த நயன்தாரா, டாப் ஹீரோயினாக உயர்ந்தார். ’நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வரும் இவர்கள், அடிக்கடி வெளிநாடு களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். தனி விமானத்தில் கேரளா சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் ஜோடியாக செல்லும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன், நயன்தாராவின் கையை விக்னேஷ் சிவன் கோர்த்திருப்பது போன்றும் இருவரும் ஒரே மாதிரியாக மோதிரம் அணிந்திருப்பது போன்றும் வெளியிடப் பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறிவந்தனர். ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா முதன்முறையாக தனது காதல் பற்றியும் விக்னேஷ் சிவன் பற்றியும் பேசியுள்ளார். தனது கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று தெரிவித்துள்ள அவர், விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தது எப்படி என்பது பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
காதலில் விழுவதற்கு, நாம் யாரை விரும்புகிறோம் என்பது முக்கியம் என நினைக்கிறேன். அதோடு அவர் நம்மை எப்படி கவனித்துக்கொள்கிறார், அவருடன் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம் என்பதுதான் முக்கியம். விக்னேஷ் சிவனிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக் கிறது. இதுதான் பிடிக்கும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவரைப் பற்றி நான் அதிகம் பேசியதில்லை. இதுவரை நான் பார்த்தவர்கள், நம் முன்னேற்றத்தைத் தடுக்க முயல்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் அப்படியல்ல. அவர் என் வாழ்க்கையில் வந்தபின்தான் நான் அதிகம் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறேன். என் வேலையைச் சிறப்பாகச் செய்கிறேன் என அவர் உணர வைக்கிறார். அன்பை உணரச் செய்கிறார். இது எனக்குப் பிடித்திருக்கிறது. இவ்வாறு நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.











