நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த அழகிய தேசம். வானுயர கட்டடங்கள் அதிகமில்லாத நவீனத்தை காணாத நகரங்கள். இதுதான் ஆப்கானிஸ்தான். நெடுங்காலமாக ராணுவத்தோடு மோதி வந்த தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, மீண்டும் ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது ஆயுதத்தால் மட்டும் அவர்களுக்கு சாத்தியமாகவில்லை. தலிபான்கள் இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற, இரண்டு தலைமுறைகளாக ஆயுத வழியில் மட்டுமின்றி ராஜதந்திரத்தையும் கையாண்டு வெற்றி கண்டுள்ளனர்.
1990-களில் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், வடக்கு பாகிஸ்தானில் உருவானது தான் தலிபான் இயக்கம். ஆப்கானிஸ்தானின் பாஸ்டோ மொழியில், இதற்கு மாணவர்கள் என்று அர்த்தம். தலிபான் இயக்கத்திற்கு பாகிஸ்தான் அரசும், அந்நாட்டின் உளவுத்துறையும் சகல விதத்திலும் உதவியதாக விமர்சனங்கள் உண்டு. மதரீதியான கருத்தரங்குகள் மூலம் தலிபான்கள் மெல்ல மெல்ல வளரத் தொடங்கினர். இதற்கு சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் ஆதரவுடன், சவூதி அரேபியாவில் இருந்து பெருமளவு நிதியுதவியும் கிடைத்தது. ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், என்ற அறிவிப்புக்கு மக்களிடையே ஆதரவு கிடைத்தது.
தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய தலிபான்கள், 1995-ம் ஆண்டு ஈரான் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஆப்கனின் ஹெராத் மாகாணத்தை கைப்பற்றியது, அவர்களின் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல் அரசுப் படைகளுக்கு சவால் விடும் வகையில், புதிது புதிதாக இடங்களை கைப்பற்றுவது தொடர்ந்தது. அந்த வகையில் அடுத்தாண்டே தலைநகர் காபூலை கைப்பற்றி, அதிபர் ரப்பானியின் ஆட்சியை வீழ்த்தினர். 1998-லேயே ஆப்கானிஸ்தானின் 90 சதவீத பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது, பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் மட்டும் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்து, தூதரக உறவையும் வைத்திருந்தன.
அப்போது அரசுத் துறைகளில் ஊழலை முழுமையாக ஒழித்தனர். வர்த்தகத்தை அதிகரிக்க சாலை வசதிகளை மேம்படுத்தினர். அதே நேரத்தில், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்தனர். மேலும் பெண் குழந்தைகள் 10 வயதுக்கு மேல் பள்ளிக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர். அதேநேரத்தில், நாட்டின் பழமையான கலாச்சார சின்னங்களை அழிக்கும் முயற்சியிலும் தலிபான்கள் ஈடுபட்டனர். அந்த வகையில், 2001-ல் பாமியான் மலைக்குகையில் வடிவமைக்கப்பட்ட பழமையான புத்தர் சிலையை தலிபான் இயக்கம் சிதைத்தது, சர்வதேச அளவில் கண்டனங்களை எழச் செய்தது. எனினும், 2001 செப்டம்பர் 11-ம் தேதி, இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர், அல்காய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது கவனத்தை திருப்பிய அமெரிக்கா, அடுத்த மாதமே, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியதில், தலிபான்கள் ஆட்சியை இழந்தனர்.
அன்று முதல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்த தலிபான்கள், சுமார் 20 ஆண்டு காலத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் ஆயுங்களின் வழியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். உயிரிழப்புகளை தவிர்க்க ராணுவத்தினர் பல நகரங்களில், மோதல் இன்றி தலிபான்களிடம் சரணடைந்துள்ளனர். அமெரிக்கப் படைகள் வெளியேறினால், 6 மாதத்திற்குள் ஆப்கன் தலிபான்களின் வசமாகும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது. அது உண்மையாகியிருக்கிறது.
நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக, அவர்கள் 2018-ம் ஆண்டிலேயே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தலிபான் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த ரகசிய சந்திப்பு, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும், என தலிபான்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பதிலுக்கு அமெரிக்கப் படைகள் மீது எந்தவித தாக்குதலும் இருக்காது, என்றும் உறுதி அளிக்கப்பட்டது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. முயற்சியை கைவிடாத தலிபான்கள், மீண்டும் 2020 பிப்ரவரியில் அதே தோஹாவில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் முடிவு எட்டப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக, இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில், ஆப்கன் படைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது தலிபான் இயக்கம். இதில், ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், தலிபான்கள் வேகமாக முன்னேறத் தொடங்கினர்.
2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு வந்த அமெரிக்கப் படைகள், தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தபடி, ஆப்கனில் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் மெல்ல மெல்ல முன்னேறி முழுமையாக கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள். அத்துடன், நாட்டின் பெயரையும், “இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்” என மாற்றியுள்ளனர். அந்தவகையில், அந்நாட்டின் தலையெழுத்தையும் தலிபான்களின் திருத்தி எழுதியுள்ளனர் என்றே கூறலாம்.









