நடிகை நயன்தாரா, ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப் பட்டன. இதில் விஜய் சேதுபதி ராம்போ என்ற ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். சமந்தா கதீஜா என்ற பெயரிலும் நயன்தாரா, கண்மணி என்ற பெயரிலும் நடிக்கின்றனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.இதற்கிடையே ட்ரீம் வாரியர் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமானார். அதில் ஒரு படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் கதை பேருந்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நடந்து முடிந்துவிட்டது.
இதையடுத்து ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அவருக்கு ரூ.11 கோடி சம்பளமாக பேசப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு படத்துக்கான சம்பளத்தை அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹீரோயின் இல்லாமல் இப்போது தொடங்கி உள்ளது.









