நாடு முழுவதும் 60 இடங்களில் ரவுடி கும்பலை ஒடுக்குவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 60 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு ரவுடி கும்பலை ஒடுக்குவதற்காக இந்த சோதனையை நடத்தியது. அதில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பாம்பிஹா கும்பல் மற்றும் நீரஜ் பவானா ஆகியோர் தலைமையிலான ரவுடி கும்பலை கைது செய்து, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில், பயங்கரவாத கும்பலுக்கும், மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்த தொடர்பை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்தார்.
நீரஜ் பவானா மற்றும் அவரது கும்பல் பிரபல நபர்களை குறிவைத்து கொலை செய்வதிலும், சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நீரஜ் பவானா மற்றும் அவரது கும்பல் தற்போது லாரன்ஸ் பிஷ்னோயுடன் ஒரு கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாபி பாடகர் மற்றும் அரசியல்வாதியான சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டதற்காக, இவரின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்றும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் நீரஜ் பவானா அறிவித்தார்.
லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி ப்ரார், விக்ரம் பிரார், ஜக்கு பகவான்பூரியா, சந்தீப், சச்சின் தபன், அன்மோல் பிஷ்னோய் ஆகியோர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கனடாவில் இருந்து சித்து மூஸ்வாலா கொலையை ஒருங்கிணைத்த கோல்டி ப்ரார் போன்ற கும்பல்களும் இவர்களில் அடங்குவர். இந்த தகவலின் பேரில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறைகளுக்குள் இருந்து செயல்படும் கும்பலை ஒடுக்க தேசிய புலனாய்வு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.







