டெல்லியில் அரசு பள்ளிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால வித்யாலயா அரசுப் பள்ளியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புத்தகங்களை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் தொடர்பான காணொளியை கெஜ்ரிவாலுடன் இணைந்துப் பார்த்தார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலினிடம், மாணவர்கள் பல்வேறு செயல்திட்டங்களை விளக்கினர். மேலும், டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறித்தும், பள்ளிகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.
https://twitter.com/ArvindKejriwal/status/1509845492376928263
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பார்வையிட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் என்றும் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.







