#NationalFilmAwards – நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த #Dhanush!

சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள…

சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், நடன இயக்குநர் என பல்வேறு  பிரிவுகளில் கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சிறந்த நடனத்திற்கான விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு கிடைத்துள்ளது. இப்பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நித்யா மேனன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை பாராட்டி பதிவு ஒன்றையும் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஷோபனாவாக நித்யா மேனன் தேசிய விருதை வென்றது எனக்கு தனிப்பட்ட வெற்றி. ஜானி மாஸ்டருக்கும், சதீஷ் மாஸ்டருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த நாள்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.