வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் பிரதமரின் அழைப்புக்கு தமிழ்நாட்டில் மக்கள் அமோக ஆதரவளித்து வீடுகளில் தேசிய கொடியேற்றி உள்ளனர் என பாஜகவின் மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார்.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடைபயண பேரணி நடைபெற்றது. இந்த நடைபயண பேரணியில் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மேலும் பாஜகவின் நடைபயண பேரணி விருதுநகர் ரயில்வே நிலையத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இந்த நடைபயண பேரணியில் சுமார் 200க்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் சீனிவாசன், தமிழகத்தில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கூட தேசிய கொடியை வீடு வீடாக சென்று கொடுக்கும் சூழல் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வீடு வீடாக சென்று தேசிய கொடியை கொடுப்பதன் மூலம் தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் அல்ல தேசிய மாடல் ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
ஒரே நாடு ஒரே அட்டை ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜக ஆட்சி முடிவு செய்கின்ற விஷயம். ஆனால் ஒரே நாடு, ஒரே கட்சி என்று முடிவு செய்வது மக்கள் என்றார். பாஜகவின் சிறப்பான ஆட்சியால் ஒரே நாடு ஒரே கட்சி என மக்கள் முடிவு செய்து விடுவார்கள் என ப.சிதம்பரம் நினைப்பதால் தான் அவர் எல்லாவற்றையும் எதிர்க்கிறார்.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என அறிவித்து இருப்பது போல் நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். அதே போல் மற்ற கட்சிகள் பிரதமர் வேட்பாளர் இவர் தான் அறிவிக்க முடியுமா என தெரிவித்தார்.