மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி விடுகிறார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு கிளை மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையை சிறப்பாக செயல்படுத்த பணிமனைகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் அரசு போக்குவரத்து கழகம் சமீப காலமாக கூடுதலாக லாபமீட்டும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார்.
மேலும் மத்திய அரசு தொடர்ந்து டீசல் விலையை உயர்த்தி வருவதால் போக்குவரத்து
கழகத்திற்கு நிதிச்சுமை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு
ஏற்படும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது என முதல்வர்
அறிவுறுத்தியுள்ளார். இதனால் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழியில்
போக்குவரத்து துறைக்கு வருவாய் ஈட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பேருந்துகள் இயக்க கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இதன் மூலம் வருவாய் ஈட்டும் வகையில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் லக்கேஜ் ஏற்றுவதற்கான நடவடிக்கை துவங்கி உள்ளது. அது போல சேலம் மண்டலத்தில் வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அரசு பேருந்துகளில் பின்புறம் விளம்பரம் இடம் பெறுவது போல் பக்கவாட்டிலும் விளம்பரம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி வருவாய் ஈட்ட ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அதை சரி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் கலந்தாலோசித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு அமைத்து மாணவர்கள் தேவைக்கு ஏற்ப பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிருக்கு இலவச பேருந்து என்பது போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டமில்லை தமிழக
முதல்வர் அவர்கள் அதற்கான தொகையை போக்குவரத்து கழகத்திற்கு வழங்கிவிடுகிறார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் முதல்வர் வழங்குகின்ற இந்த சேவையை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது எனதெரிவித்தார்.







