நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (63). இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு அதன்பின் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து சுகாதாரத் துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார், கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் அனுமதி இன்றி, சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு மருத்துவ சிசிச்சை அளிப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
—ரூபி.காமராஜ்







