நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகே வட்டூர்
பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கவிதா, இவர்களது உறவினர்களான கந்தாயி,
குஞ்சம்மாள், மகாலட்சுமி , சாந்தி மற்றும் கவிதாவின் தம்பியின் 4 வயது மகள்
லக்சனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு
காரில் திருச்செங்கோடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவி ஓட்டி
வந்தார்.
இதையும் படிக்கவும்: திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!
அப்போது பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் படமுடிபாளையம் அருகே சாலை
ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பகுதி மீது கார் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அப்பகுதியினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார் ஓட்டுனர் ரவி, அவரது மனைவி கவிதா, 4 வயது பெண் குழந்தை லக்சனா ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் கவிதா என்பவர் மருத்துவமனையை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நான்கு வயது குழந்தை லக்சனா, கார் ஓட்டுனர் ரவி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







