தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 20 ஆம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் நடைபெறுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்ததாவது..
”தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். இந்த கோரிக்கை தீர்மானமான கோரிக்கையாக உள்ளது இது அவசியமானதும் கூட. ஜாதி , மதம் என்று இல்லாமல் மதசார்பறற முறையில் இருக்க வேண்டும் என்பதை மாற்றும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்திற்கு எதிராக அவர் தொடரந்து நடந்து வருகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம் என்ற முறையில் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதற்கு மாறாக மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாறாக இந்திய நாடு மதசார்பற்ற நாடு என்பதற்கு மாறாக ஆளுநர் தனி பொறுப்பு தனி ஆதிக்கம் செல்வாக்கை கொண்டு நெருக்கடி கொடுக்கும் அவரை பதவியில் இருந்து நீக்க இந்த கையெழுத்து இயக்கம்.
ஜனநாயக சக்தியை இணைத்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வைகோ இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியை ஆதரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் கையெழுத்து போட்டு உள்ளேன். இது நிச்சயம் கோடி அல்ல பல கோடி மக்களை சென்று சேர வேண்டும்.” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்ததாவது..
“தமிழ்நாட்டு ஆளுநர்கள் யாரும் செய்யாத வகையில் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம். ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல் விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?. ஆளுநர் ஆர்.என்.ரவி மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார் அது பற்றி அவருக்கு என்ன தெரியும்.
அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக விமர்சித்து பேசுகிறார். முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா? ஆளுநர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை உள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே ஆளுநர்தான் அரசுக்கு எதிராக வேலை செய்தார். அவர்கள் அனுப்பி வைத்து விட்டார்கள்.
இந்த கையெழுத்து இயக்கம் அரசியல் காரணத்திற்காக அல்ல. தமிழ்நாட்டின் நன்மைக்கு தான். இந்த கையெழுத்து இயக்கம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். திமுக தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என வைகோ தெரிவித்துள்ளார்.







