கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உயிரிழந்த சிறுவன் மரணம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அஸ்வின். அதங்கோட்டில் உள்ள மாயா கிருஷ்ணசுவாமி வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி பள்ளி வளாகத்தில் நிற்கும் போது ஆசிட் கலந்த குளிர்பானத்தை அதே பள்ளி சீருடையில் வந்த அடையாளம் தெரியாத மாணவன் கொடுத்துள்ளான். அதை குடித்த அஸ்வினுக்கு அதன் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டான். ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்ததால் சிறுவனுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீசார் பள்ளிக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய சென்ற போது அங்கு சிசிடிவியே இல்லை என்பது தெரிந்தது. “பள்ளி சீருடை அணிந்த ஒருவன் தான் தனக்கு குளிர்பானம் குடிக்க கொடுத்தான். பாதி குடிக்கும் போதே மற்றொரு மாணவன் அந்த குளிர்பானத்தை தட்டிவிட்டான். இதனால் பாதி குளிர்பானத்தை மட்டுமே குடித்தேன் என்று பாதிக்கப்பட்ட மாணவன் அஸ்வினிடம் விசாரித்த போது போலீசாருக்கு தெரியவந்தது.
ஆசிட் கலந்த குளிர்பானத்தை அஸ்வினுக்கு கொடுத்த மாணவன் யார் என கண்டுபிடிக்க பள்ளியில் படிக்கும் மற்ற சிறுவர்களின் புகைப்படங்களை அஸ்வினிடம் காண்பித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குளிர்பானம் கொடுத்த மாணவன் அந்த பள்ளியில் படிக்கவில்லை என தெரிய வந்ததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. குளிர்பானத்தை முழுமையாக குடிக்கவிடாமல் தடுத்த மாணவனும் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்தது, போலீசாருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அஸ்வினின் தாயிடம் விசாரணை செய்தனர். அதிலும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் அஸ்வின் உயிரிழந்ததால் காவல்துறைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதுடன் 21 நாட்கள் கடந்தும் போலீசார் குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
“குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்” என காங்கிரசார் தொடர் போராட்டத்தை முன்எடுத்துள்ளனர். “தனது மகனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை மாணவன் உடலை வாங்கமாட்டோம் எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நீதி கிடைக்கும் வரை மனைவியுடன் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாகவும்” என்று மாணவனின் தந்தை சுனில் கூறியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பள்ளிக்கு கல்வித்துறை அனுமதியே வழங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை போலீசார் மாணவன் அஸ்வின் மரண சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர். இதையடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் களியக்காவிளை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசார் பெற்றுக் கொண்டனர்.
நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி சங்கர், சிபிசிஐடி ஆய்வாளர் பார்வதி தலைமையில் சிபிசிஐடி போலீசார் மாணவன் அஸவின் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் DVR கருவி எலி கடித்துள்ளதாக கூறி அதனை பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி போலீசாரிடம் காண்பித்துள்ளனர். பள்ளி வாகன எண்ணிக்கை போன்ற விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். இதன் பிறகு மாணவனின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுவரை நடந்த பல்வேறு கொலை சம்பவத்தைவிட இது மிகவும் கொடூரமான சம்பவம் என்பது தான் காவல்துறையினரின் அதிர்ச்சி. கச்சிதமாக திட்டமிட்டு மாணவனை கொன்றது யார்? மாணவனை தினமும் பின்தொடர்ந்து வந்து பள்ளி வழக்கத்தில் மாணவன் எங்கு நிற்பான்? எவ்வளவு நேரம் பள்ளி வளாகத்திற்கு வெளியே காத்திருப்பான் என்பதை எல்லாம் கண்காணித்து இந்த கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகித்துள்ளனர்.







