“மனசே பதறுது… அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விஜய் பேசினார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : Gold Rate Today | ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.1,560 உயர்வு… இன்றைய விலை நிலவரம் என்ன?

தொடர்ந்து, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு வருகை தந்த விஜய் அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், “அனைவருக்கும் வணக்கம். குஜராத்தில் நேற்று மிகப்பெரிய விமான விபத்து நடைபெற்றது. இந்த சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை பார்க்கும்போது மனசே பதறுது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்காகவும் இரண்டு நிமிடம் மௌ அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். பின்னர் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி சிறபித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.