திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராயை காணவில்லை என அவரது மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகுல் ராய், நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அவர் இரவு 9 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அங்கு வரவில்லை. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று முகுல் ராயின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகுல் ராயின் மகன் சுபர்க்ஷு ராய், ” என்னுடைய தந்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் ஜிஇ-898 விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். அவர் 9.55 மணிக்கு டெல்லியில் தரையிறங்க வேண்டும். ஆனால் அவர் அங்கு வரவில்லை. பல முறை முயற்சி செய்தும், என்னால் என் தந்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கடைசி நேர கட்சி தாவல் – கர்நாடக பாஜகவுக்கு சவாலா?
முன்னாள் ரயில்வே அமைச்சரான முகுல் ராய், தனது மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. முகுல் ராய் தனது மனைவி இறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திரிணாமுல் கட்சியில் இருந்த முகுல் ராய், கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அப்போது பாஜக தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகுல் ராய், பின்னர் திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.







