தேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், அரவழி போராட்டமாக நடந்ததே அதன் சிறப்பாகவும் கருதப்பட்டது. இருப்பினும் குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டத்தில் சில…

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், அரவழி போராட்டமாக நடந்ததே அதன் சிறப்பாகவும் கருதப்பட்டது. இருப்பினும் குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டத்தில் சில கலவரங்களும் நடைபெற்றது. அதன்பின் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தும் அது பெரிதும் வெளியே பேசப்படாத நிலையில், மீண்டும் தற்போது விவாசியகளின் குரல் வெகுண்டு எழத் தொடங்கியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 10 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 40 விவசாய சங்கங்கள் இணைந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் ‘கிசான் மகாபஞ்சாயத்து’ என்ற பெயரில் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம்தேதி ஒரு பெரிய கூட்டத்தை நடத்தியுள்ளனர். வரும் மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையும் பிரச்சாரத்தையும் தொடர, தங்கள் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து பெண்கள் உட்பட 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

இது குறித்து பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறுகையில், இந்த நாடு விற்பனையாவதை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மட்டுமல்லாது இளைஞர்கள், தொழிலாளர்கள், வர்தகம் என அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைத்தால் நாங்கள் செல்ல தயார் என்றும் அவர் கூறினார்.

விவசாய கூட்டத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான், பாஜக எம்.எல்.ஏ. உமேஷ் மாலிக் ஆகியோரின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த செப்டம்பர் 8ஆம் தேதி கடைசி நாளாக மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது பஞ்சாப் விவசாயிகள் சங்கம்.​​ அவ்வாறு செய்யத் தவறினால் நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. மேலும், பாரத் பந்த் செப்டம்பர் 25-க்குப் பதிலாக செப்டம்பர் 27 -ஆம் தேதி கடைபிடிக்கப்படும் எனவும் விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. விவசாயிகளின் இந்த மாநாட்டு கூட்டம் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கான தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.