அதானி…
இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்த மந்திர சொல்….
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி என முக்கியமான துறைகளில் கோலோச்சி வரும் தொழிலதிபர்…
உலக பணக்காரர்கள் பட்டியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்…. போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
இவையெல்லாம் ஜனவரி 24-ம் தேதி வரை தான்… அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அன்று வெளியிட்ட அறிக்கை, வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்த அதானி குழுமத்திற்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. கொரோனா உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியான காலத்தில் கூட வெற்றி நடைபோட்டு வந்த அதானி குழுமம் முதன்முறையாக வீழ்ச்சியை சந்தித்தது. வீழ்ச்சி என்றால் சாதாரண வீழ்ச்சி அல்ல… குழுமத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்த வீழ்ச்சி.
அதானி நிறுவனம் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை வெளியான உடனே அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தாறுமாறான சரிவை சந்தித்தன. இரண்டே நாட்களில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமம் இழப்பை சந்தித்தது. இதனால், உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய பங்குச்சந்தைகள் கண்ட ஊழல்கள்!
1992-ல் ஹர்ஷத் மேத்தா, 2001-ல் கேதன் பரேக் அரங்கேற்றியது தான் நாடு இதுவரை சந்தித்த மிகப் பெரிய பங்குச் சந்தை ஊழல்கள். இந்த இரு ஊழல்களால் பெரும் பண இழப்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மட்டுமே சந்தித்தனர். ஆனால், தற்போது அதானி குழுமம் மீதான புகாரால், பங்குச் சந்தை என்றால் என்னவென்றே தெரியாத சமானிய மக்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. காரணம், எல்ஐசி என அழைக்கப்படும் மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதானி குழுமத்தில் செய்த முதலீடு தான்.
அதானியில் முதலீடு – எல்ஐசி விளக்கம்
அதானி குழுமத்தில் விதிகளின்படியே முதலீடு செய்திருப்பதாக எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்தது. ரூ.36,000 கோடி அளவுக்கே முதலீடு செய்திருப்பதாகவும்; எல்ஐசி நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் இது வெறும் 0.975 சதவீதமே என்றும் பதில் அளிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டது. எல்ஐசி நிறுவனத்தின் இந்த விளக்கம், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அச்சத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், எல்ஐசி நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள கவலை இன்னும் முழுமையாக அகலவில்லை.
வங்கிகள் கொடுத்த ரூ.47,100 கோடி!
பொதுமக்களின் அடுத்த அச்சத்திற்கு காரணம், பொதுத்துறை வங்கிகள் அதானி குழுமத்திற்கு வாரி வழங்கிய கடன்கள். பொதுத்துறையில் உள்ள முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் மற்றும் கனரா வங்கிகள் அதானி குழுமங்களுக்கு 47 ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன. இதனால், இந்த வங்கிகளில் பணத்தை போட்டு வைத்துள்ள முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர் . மேலும், மத்திய அரசுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களும் அதானி குழுமத்திற்கு நிதியுதவி செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் 11 ஆயிரத்து 400 கோடி அளவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.
அதானியால் ஆட்டம் காணும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்!
அதானி குழும முறைகேடு புகார் விவகாரத்தில் எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகள் செய்த முதலீடுகள் தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதானி நிறுவனத்தில் செய்த முதலீடுகள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.
முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்!
நாட்டில் சிறியது பெரியது என்ற வரையறை இல்லாமல் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை, நாட்டில் உள்ள 406 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. முன்னணியில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்வதை சமார்த்தியமாக தவிர்த்துள்ளன. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் கணிசமான தொகை அதானி குழுமத்திற்கு சென்றிருப்பது, அந்த நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களாக சந்தித்து வரும் சரிவின் மூலம் தெரிய வந்துள்ளது.
3 கோடி பேரின் முதலீடு என்ன ஆனது?
வருமான வரியில் விலக்கு பெறலாம் என்பதற்காகவும், எதிர்பாராத செலவு உள்ளிட்டவற்றிக்காக சமாளிப்பதற்காகவும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேமிக்கும் பழக்கம் நடுத்தர மக்கள் மத்தியில் இன்றைய சூழலில் பரவலாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி மியூச்சுவல் நிறுவனங்களில் நாட்டில் சுமார் 3 கோடி பேர் முதலீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு?
டிசம்பர் 31-ந் தேதி வரையிலான கால கட்டத்தில், அதானி குழுமத்தில் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.4,748 கோடியையும், யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ.1,868 கோடியையும் முதலீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு?
இது தவிர அதானி குழுமத்தில், கோடக் மகேந்திரா – ரூ.1593 கோடி,
நிப்பான் இந்தியா – ரூ.1262 கோடி,
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் – ரூ.1203 கோடி,
ஹெச்.டி.எஃப்.சி – ரூ.761 கோடி,
குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் – ரூ.695 கோடி,
ஆதித்ய பிர்லா சன் லைஃப் – ரூ.398 கோடி,
டாடா மியூச்சுவல் ஃபண்ட் – ரூ.389 கோடி,
என் ஜே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் – ரூ.297 கோடி முதலீடு செய்திருப்பதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர சின்னஞ்சிறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் பல நூறு கோடிகளை அதானி குழுமத்தில் முதலீடுகளாக கொட்டியுள்ளன.
கவலையில் 3 கோடி முதலீட்டாளர்கள்!
அதானி குழுமத்தின் வீழ்ச்சியால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், மியூச்சுல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அதானி விவகாரத்தில் செபி என அழைக்கப்படும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், செபி நிறுவனம் எப்படி நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
அதானி விவகாரத்தை செபி ஏன் கண்டுகொள்ளவில்லை?
ரூ.6,600-ல் இருந்து ஓரிரு நாட்களிலேயே ரூ.500-க்கு அதானி குழும பங்குகள் வீழ்ச்சி அடைந்த போது, செபி அமைப்பு அதனை கண்டு கொள்ளவில்லை. காரணம், அதானியின் மகன் கரண் அதானியின் மாமனாரான ஷிரில் ஷ்ராஃப் தான், செபியில் பெரு நிறுவனங்களின் நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரம் படைத்த உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், ஷிரில் ஷ்ராஃப் எப்படி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
2009-ம் ஆண்டு சத்யம் குழுமம் முறைகேட்டில் ஈடுபட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை காப்பாற்றியது.
அதே போல், அதானி குழும விவகாரத்திலும் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கான அப்பாவி முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.