‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் பறித்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு நான்கு பேர் கொலை செய்த கொடூர காணொளி வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துளிகூட பயமில்லாமல் கொலை செய்வதும், அதனை அருகில் இருப்போர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் திமுக ஆட்சியில் கொடூர குற்றங்கள் அன்றாடம் ஆகிவிட்டதையும் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சிதைந்துள்ளதையும் பட்டவர்த்தனமாக்குகிறது.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற படுகொலைகளைப் பெருக்கிவிட்டு, கூச்சமே இல்லாமல் வெல்வோம் ஒன்றாக என அறைகூவலிடும் அறிவாலயம் ஆட்சி இனி என்றும் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் பறித்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றுவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.