தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இது தான் அமைதி பூங்காவா? என முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து பதிலளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றிற்கு வருகை தந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையில் வைத்திருக்கும் துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது. கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் தகுதியுள்ளது. ஏனென்றால் 1974ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி. அதை நாடாளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான் என தெரிவித்தார்.
தற்போது உள்ள நிலையை பார்த்தால் கட்சதீவு நமக்கு வந்து விடும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் தற்போது பிரதமர் முன்னிலையில் கட்சதீவு குறித்து பேசி நாடகம் நடத்தியதாக குற்றம்சாடினார்.
மேலும், கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழிக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. பிறமொழிகளை எதிர்ப்பது தான் திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது. பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதனை திமுக கைவிட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் 8 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பொது மக்களிடையே சென்று எடுத்து கூறுவது தான் பாஜகவின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பாஜகவின் போராட்டமானது தொடரும் என்றார்.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டபடாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் 5க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள், கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்டாட்சியாக நடந்து வருகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். 24 மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.








