ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்தப் போட்டிகளில் அசராமல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கிறது. இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை இண்டியன்ஸ் அணி, மூன்று தோல்வி, மூன்று வெற்றி என ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டுபிளிசிஸ் அமர்க்களமாக ஆடி வருகின்றனர். ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் சுழல் மற்றும் வேகப்பந்துகளை விளாசித் தள்ளிய இவர்கள், ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இன்றைய போட்டியிலும் இவர்கள் வாண வேடிக்கை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இவர்களைத் தொடர்ந்து மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி என பேட்டிங்கில் ஸ்டாராங்காக இருக்கிறது சிஎஸ்கே. ஆல்ரவுண்டர் வேலையை சாம் கர்ரனும் ஜடேஜாவும் அட்டகாசமாக செய்து வருகின்றனர். பந்துவீச்சில் தீபக் சாஹர், லுங்கி நிகிடி, தங்கள் திறமைகளை காண்பித்து வருகின்றனர். முந்தைய போட்டிகளில் பெற்ற வெற்றி மற்றும் தோனியின் ஆர்ப்பாட்டமில்லாத கேப்டன்சி என பெரும் நம்பிக்கையில் இருக்கிறது சிஎஸ்கே!.
அதே நேரம் மும்பை இண்டியன்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வியை கண்டிருந்தாலும் அதை குறைத்து மதிப்பிட முடியாது. குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவ், பொல்லார்டு, க்ருணால் பாண்டியா ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுப்பார் என்பதால் அந்த அணியும் பேட்டிங்கில் வலுவாகவே இருக்கிறது. பந்துவீச்சில் பும்ரா, ராகுல் சாஹர், போல்ட் மிரட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி 19 முறையும் சிஎஸ்கே 13 முறையில் வெற்றிபெற்றுள்ளன. வெற்றிக்காக இரண்டு அணிகளுமே கடுமையாகப் போராடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.