முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்த முலாயம் சிங்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 82 வயதான முலாயம் சிங்கின் அரசியல் வரலாற்றை விரிவாகக் காணலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபாய் கிராமத்தில் சுகர்சிங் யாதவ் மற்றும் மூர்த்தி தேவிக்கு 1939ம் ஆண்டில் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். கர்ம ஷேத்ரா கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற முலாயம் சிங் யாதவ், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார். வார நாட்களில் ஆசிரியர் பணி, மற்ற நேரங்களில் மல்யுத்த பயிற்சியாளர் என இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து வந்த அவர் மக்கள் மீது கொண்ட அக்கறையால் தன் பார்வையை அரசியல் பக்கம் திருப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிரியராக இருந்து கொண்டே சோசலிச தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயணன் வழியில் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். 1967ம் ஆண்டு சம்யுக்த சோசலிச கட்சி சார்பில் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு சென்ற முலாயம் சிங் யாதவ், 1974ம் ஆண்டு சரண்சிங்-கின் பாரதிய கிராந்தி தளம் சார்பில் நின்று வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்திற்கு சென்றார்.

1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த அரசியல் நெருக்கடி நிலையை, எதிர்த்ததால் 19 மாதங்கள் முலாயம் சிங் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1977ம் ஆண்டு மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான முலாயம் சிங் யாதவுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. லோக்தளம் பிளவுபட்ட போது, கிராந்திரிகாரி மோர்ச்சா எனும் கட்சியை தொடங்கிய முலாயம் சிங்கிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவுடன் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரானார்.

1996ம் ஆண்டு மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்ற முலாயம் சிங், தேவகவுடா, குஜ்ரால் ஆகிய இரு பிரதமர்களின் ஆட்சியிலும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இடையே இருந்த நட்பு மேலும் வலுவடைந்தது. தேசிய அரசியலில் இந்த மூன்று தலைவர்களும் இணைந்து முக்கிய இடத்தைப் பிடித்தனர்.

2000ஆம் ஆண்டில் தனது மகன் அகிலேஷ் சிங் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்து நாடாளுமன்றத்திற்கும் அனுப்பி வைத்தார். தமது தந்தையால் அரசியலுக்கு வந்த அகிலேஷ் சிங் யாதவ், வாய்ப்பை பயன்படுத்தி 2012ம் ஆண்டில் இளம் வயதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரானார்.

பத்து முறை எம்.எல்.ஏ, ஒரு முறை எம்.எல்.சி, 7 முறை மக்களவை எம்.பியாக பதவி வகித்த முலாயம் சிங் யாதவ், கம்யூனிச கட்சி தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவர். சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற அரசியல் சிந்தாந்தத்தை கைவிடாத அவர், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதுடன், இந்திய அரசியலிலும் முக்கியப் புள்ளியாக திகழ்ந்த முலாயம் சிங், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது – கராத்தே தியாகராஜன் பேட்டி

Arivazhagan Chinnasamy

அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்

Halley Karthik

அமலுக்கு வந்த இ-பதிவு முறை!