ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ராவுக்கு சென்ற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கக்கு மூவர்ண வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்தியாவின் மூவர்ணம் வெளிப்படும் வகையில் நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய வண்ணத்தில் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற 13-வது இந்திய – ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். பின்னர் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்குடன், அவர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருநாடுகளின் கடற்படைகள் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்.







