ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து அந்தப் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதாலும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. பல நாடுகள், தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளன.
இதற்கிடையே, இந்த வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 13 நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், கொரோனா முதல் அலை பரவிய போதும் சர்வதேச விமானங் களுக்கு உடனடியாக இந்தியா தடை விதிக்கவில்லை. அதனால் டெல்லி நகரம் அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டது. பல்வேறு நாடுகள் இப்போது ஒமிக்ரான் வைரஸ் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியா இன்னும் ஏன் இந்த விஷயத்தில் தாமதம் செய்கிறது என்பது தெரியவில்லை. உடனடியாக அதற்கு தடை விதியுங்கள் என்று கூறியுள்ளார்.
அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நம் நாடு கடந்த ஒன்றரை வருடமாக கொரோனாவுக்கு எதிராக போராடி மீண்டுள்ளது. இப்போது புதிதாக உருவாகியுள்ள வைரஸை தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகள், புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவும் உடனடியாக அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். தாமதித்தால் பெரும் தீங்கு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.









