திரைப்படம் பார்த்துவிட்டு, இரவில் வீடு திரும்பிய பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மகேஷ்குமார், தனது கடையில் பணிபுரியும் பெண் ஊழியருடன் திரைப்படம் பார்த்துவிட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் முருகன், இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட தாகக் கூறப்படுகிறது.
பின்னர், மகேஷ்குமாரின் ஏடிஎம் அட்டையை பெற்றுக்கொண்ட காவலர் முருகன், அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பெண் ஊழியரை, பாதுகாப்பாக அழைத்து செல்வதாகக் கூறி, தனது வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும் தெரிகிறது.
பின்னர், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததுடன், வணிக வளாகம் ஒன்றில் வைத்து காவலர் முருகன், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட அப்பெண், வீட்டில் இந்த சம்பவத்தைச் சொல்லி கதறி அழுதுள்ளார். பின்னர் தூக்க மாத்திரை உட்கொண்டு உயிரிழப்பு க்கு முயன்றுள்ளார். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார், காவலர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








