தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை – சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு ரயிலை ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை கைவிட வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறைவான பயணிகள் வருவதால் ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே கூறியுள்ள காரணம் ஏற்கக்கூடியதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இது கொள்ளைநோய் காலம். மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்கவேண்டிய ஒன்று என்றும், இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கொள்ளைநோய் காரணமாக மக்கள் பயணிக்க அச்சப்படுவதும், மிகவும் தேவையான பயணங்களை மட்டும் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பயணிகள் வரவு குறைவாக இருப்பதற்கு கட்டணம் அதிகமாக இருப்பதும் காரணம் என்று கூறியுள்ளார்.
இதே வழித்தடத்தில் ஓடக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட இதன் கட்டணம் 35% அதிகமாகும். தனியார் நிறுவனங்களை போலவே லாப நோக்கத்தோடு ரயிலை ரத்து செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறியுள்ளார். மேலும், ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ் போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிட வேண்டும்’ என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப்போல கோவை-பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.







