புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது கொரோனா பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மூன்றரை மாதங்களாக தொடர்ந்து நாட்டில், கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம், இதர கொண்டாட்டங்கள் மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு கூட்டம் கூடி அதனால் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கடிதத்தில் ராஜேஷ் பூசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் பிறப்பித்துக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு தேவைப்படும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







