மயிலாடுதுறையில் வசித்து வந்த தாய், ஒன்றரை வயது குழந்தை வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை பகுதியை சேர்ந்த பார்த்திபனின் மனைவி செல்வகுமாரி. பார்த்திபன் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வகுமாரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு 2 சவரன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் வீட்டை வரதட்சணையாக கொடுப்பதாக செல்வகுமாரியின் குடும்பத்தினர் கூறியிருந்தனர். ஆனால், பார்த்திபனின் பெற்றோர், வீட்டிற்கு பதிலாக நகையாக கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, செல்வகுமாரிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே சிறிது காலமாக பிரச்சினை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் செல்வகுமாரி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வகுமாரியும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செல்வகுமாரியின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாய் மற்றும் ஒன்றரை வயது குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







