‘சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள்; நடவடிக்கை உறுதி’

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகத்திஸ்வரா்…

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகத்திஸ்வரா் திருக்கோவில் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அகதீஸ்வரர் கோவில் குளம் தொடர்பாக வந்த செய்திகளின் அடிப்படையில் இன்று ஆய்வு செய்வதாகவும், சென்னை மாநகராட்சி இந்த குளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது நடத்திய இந்த ஆய்வின் அடிப்படையில், இந்த குளத்தைத் திருக்கோவில் குளமாகவே வடிவமைக்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘ஓபிஎஸ் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்’ – இபிஎஸ் தரப்பு பதில் மனு’

மேலும், நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பார்த்தோம், அதை இன்னும் உள்வாங்கிக் கொண்டு, பணிகளை வேகமெடுக்க உள்ளோம் என்றும், அடுத்த முறை அந்த வழக்கு வரும்போது நீதிபதிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் இருக்கும் என்றும் கூறினார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கோவில் குளங்கள் அனைத்தும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், விரைவில் அனைத்து குளங்களின் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனக் கூறினார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்று வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகப் பல லட்சம் புகார்கள் வருவதாகக் கூறிய அமைச்சர், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி இவ்விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு அடியும் பார்த்து, அறிந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.