28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்


Arivazhagan Chinnasamy

133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் சிலை:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இங்குத் தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்குக் காரணம், அங்குக் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், 133 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையும் அமைந்திருப்பதால் தான் எனச் சொல்லப்படுகிறது.

கடலில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது என்பது வரலாறு. 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் சிலை அமைக்கும் பணியை அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தொடங்கிவைத்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தலையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியை அமைத்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 133 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எவ்வித தொடக்கமும் இல்லாமல் அப்படியே கிடப்பிலிருந்தது. 133 அதிகாரங்களில், 1330 திருக்குறள்களை வழங்கிய திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு மீண்டும் ஆட்சியை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக அமைத்தது. அதனைத்தொடர்ந்து, 1997-ல் மீண்டும் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. 6.14 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை அமைந்தது. 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார் என்பது வரலாறு.

பெரியார் உலகம்:

133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையின் தொடர்ச்சியாக, திராவிடர் கழக சொந்த நிதியிலிருந்து, பெரியார் உலகம் அமைய இருப்பதாகத் தகவல் வெளியானது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் ‘பெரியார் உலகம்’ உருவாக்க இருப்பதாகப் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்தது. அதன்படி, 40 அடி உயரப் பீடத்தில் 95 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படும் எனவும் அதற்கான மாதிரி சிலையாகச் சென்னையில் அமைந்து பெரியார் திடலில், பீடத்துடன் 30 அடியில், 2015-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

பெரியார் உலகத்தில், 135 அடி உயரத்தில் அமையும் இந்த சிலை தமிழ்நாட்டில் மிக உயரமான சிலைகளில் ஒன்றாக அமைய உள்ளது. இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கம், கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்கா போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்படவுள்ளது. மேலும், நூலகம், புத்தக விற்பனையகம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பேனா சின்னம்:

சென்னை மெரினாவில் அமையும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து 290 மீ தூரத்திற்குக் கடற்கரை, 360 மீ தூரத்திற்குக் கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்குப் பாலம் அமைக்கப்பட்டு 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா சின்னத்தை நிறுவத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள, சிலைகளை விட இந்த நினைவுச் சின்னம் உயரமாக அமையவிருப்பதால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. உலகத்தரத்தில் உருவாக்கப்படும் இந்த நினைவுச் சின்னமானது, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் கருணாநிதியின் புகழை மங்கச் செய்யாதவாறு வடிவமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் எழுத்தையும் பிரிக்கவே முடியாது என்பதற்கேற்ப வாழ்நாளின் இறுதிக்காலம் வரை எழுதிய பெருமைக்குரிய அவருக்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தில் பிரம்மாண்ட பேனா சிலை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்குக் கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது. இதன்படி, திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்குத் தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பெரியார் சிலையும், பேனா சின்னமும் அமைந்தால், தமிழ்நாட்டின் மிக உயரமான சிலையாக முதல் இடத்தில் பெரியார் சிலையும், இரண்டாம் இடத்தில் பேனா சின்னமும், மூன்றாம் இடத்தில் திருவள்ளுவரின் சிலையும் இருக்கும். இவை தமிழ்நாட்டின், சுற்றுத்தளங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், வரலாற்றின் பக்கங்களையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதனை அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதனை சாதுரியமாகக் கையாண்டு திருவள்ளுவர் சிலையை அமைத்து வரலாறு படைத்தார்.

அதுபோலவே தற்போது அமைக்கவிருக்கும் பேனா சின்னத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாகக் கலைஞருக்கான நினைவுச் சின்னம் வேண்டும் என்கிறோம். ஆனால், கடலில் வேண்டாம் என்கிறோம். படத்தில் உள்ளது போல், பேனாவை அவருடைய நினைவிடத்திலோ அல்லது அவர் உருவாக்கிய தலைமைச் செயலகத்திலோ அல்லது மதுரையில் அமைக்கப்படும் “கலைஞர் நூலகத்திலோ” அல்லது வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து வைக்க வேண்டும். கடலில் வேண்டாம் என்பது மட்டுமே எங்கள் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை நிறுவ விட முடியாது. அதெல்லாம் முடியாது. நிறுவ நான் விடப்போவதும் இல்லை. அப்புறம் கண்ணாடி உள்ளே வைப்பீர்கள். இது எல்லாம் தேவை இல்லாத சேட்டை. இது எல்லாம் யாரு காசு?” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவுச் சின்னம்? நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான பணத்தை வைத்து அமைத்துக் கொள்ளவும்” என தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கலைஞருக்குப் பேனா வடிவிலான நினைவுச்சின்னம் வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்பவர்களின் டி.என்.ஏ-வை நாம் பரிசோதிக்க வேண்டும். கலைஞர் நீண்டகாலம் தமிழ் சமுதாயத்துக்காக, தமிழருக்காக உழைத்த ஒரு மனிதர். அவர் எவ்வளவு எழுத்துப் பணி செய்திருக்கிறார் என்பதை இந்தச் சமூகம் அறியும். மேலும், கலைஞரின் நினைவாக அவருடைய சிலையை வைக்காமல் பேனா சிலையை வைப்பது எவ்வளவு இலக்கிய நயமிக்க, ரசனையான செயல், அதைக் காங்கிரஸ் வரவேற்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதேபோல, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில், “கருணாநிதியின் அந்தப் பேனா அசாதாரணமானது. அதன் மை – வற்றாத செயல்களாக ஆக்கி இருப்பது. பெரியார் – அண்ணா – தமிழ் இன மொழி உணர்வாளர்களின் சிந்தனை செயலாக உள்ளமை என்பதாம். வருங்கால தலைமுறையினருக்கான சின்னம்! எதிர் நீச்சல் எங்கள் வாடிக்கை என்றே உலகுக்கு உணர்த்திய உன்னத இயக்கம் திராவிடர் இயக்கம் என்பதாம். இந்த சலசலப்புகள் கண்டு தமிழ்நாடு அரசோ, முதலமைச்சரோ யோசிக்க வேண்டியதில்லை. இது கருணாநிதி என்ற ஒரு தனி மனிதருக்கான சிறப்பு மட்டுமல்ல; எழுத்துரிமையில் எதனையும் எதிர் கொண்டு வென்றுகாட்ட முடியும் என்ற சரித்திர உண்மைக்காகவும், சாசுவதமான சரித்திரச் சான்றாகவே அது திகழும்! அதன் பெருமை சிறப்பு வருங்கால தலைமுறையினருக்கும், எழுத்துக்களால் எப்படி சமுதாயங்களைப் புரட்டிப் போட்டு புத்தாக்கம் செய்து மவுனப் புரட்சியாக நடத்திச் சாதிக்க முடியும்” எனப் பேனா சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இப்படியான ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy