மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி,…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டுமெனக் கூறிய முதலமைச்சர், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.







