இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்துள்ளார். ஆனால், கேரளாவில் ஜூலை 30-ம்தேதி 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்தபோது குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் நேற்று தலா ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 35 வயது நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, குரங்கம்மை நோயை கண்டறிந்து முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அதனை தடுப்பதற்கான அடுத்த கட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது.
குரங்கம்மை பரவை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு சுகாதார உறுப்பினர் வி.கே.பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குரங்கம்மை பாதிப்புகளுக்கான பரிசோதனைகளை அதிகரித்தல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை இக்குழு மத்திய அரசுக்கு வழங்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையங்களில் தீவிர காண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், யாருக்கேனும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அரசே அந்த தகவலை வெளியிடும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்