“ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!

கிராம கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை,  ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், …

கிராம கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை,  ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர்,  தங்கள் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் நடத்தப்படும் பொங்கல் விழாவில்,  ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில்,  “திருவிழாவின்போது நடக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளில்
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.
ஆபாசமாகவும்,  அநாகரிகமாகவும் நடத்தப்படுகிறது.  இதனால் தகராறு ஏற்பட்டு பல
குற்ற வழக்குகள் பதிவாகின்றன” என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வாதங்களை கேட்ட நீதிபதி,  “ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அனைத்து கோயில் திருவிழாக்களிலும் பொதுவானதாகிவிட்டன.  பொதுமக்களிடம் வரி வசூலித்துதான் கோயில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.  கஜா புயல் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோது.  சில இளைஞர்கள் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக சேகரித்த பொதுப் பணத்தை பயன்படுத்தி,  தங்கள் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரினார்கள்.

இதன்மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.  மனுதாரரின்  கிராம
இளைஞர்களும், பொதுமக்களும் உணர்ந்து, பணத்தை ஆக்கப்பூர்வமான நோக்கத்துக்காக
பயன்படுத்த வேண்டும்.  ஆக்கப்பூர்வமாக செலவு செய்தால் இன்னும் நிறைய சாதிக்கலாம்” என தெரிவித்தார்.  மேலும்,  மனுதாரர் கிராம கோயில் விழாவையொட்டி நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.