“மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம்”- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்

மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.  ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை…

மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,  ஜனசேனா,  பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.  175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும்,  25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.

இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டா்கள் மீது தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினா் தாக்குதல் நடத்தியதாக அக்கட்சி மூத்த தலைவா்கள் குற்றம்சாட்டினா்.  அவர்கள் இதுதொடா்பான புகாா் கடிதத்தையும், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதுகுறித்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது,  “மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை மத்திய அரசுக்கும்,  பாஜகவுக்கும் நினைவுபடுத்துகிறோம்.  ஆந்திரா மற்றும் நாட்டின் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்.  பொதுசிவில் சட்டத்தை எதிா்ப்பதாக ஏற்கெனவே கட்சித் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துவிட்டாா். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் குறித்த நிலைப்பாட்டை தற்போது வரை எடுக்கவில்லை” என்றாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.