பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 13 லட்சம் ரூபாய் கிடைக்கும் என நூதன முறையில், மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டி கிராமத்தை
சேர்ந்த டிராவல்ஸ் தொழில் நடத்தி வரும் சுரேஷ் (32) என்பவர் அதியமான் கோட்டை
காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில், இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் பணம் கோடி கணக்கில் 2 ஆயிரம் ரூபாயாக இருப்பாதாகவும், அந்த பணத்தினை மாற்றி வருவதாகவும் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் அதற்கு 2 ஆயிரம் நோட்டுக்களாக 13 லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி நம்ப வைத்து குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்ட கும்பல், 13 லட்ச ரூபாய் பணம் இருப்பதாக கூறி பணக்கட்டுகளை போல வெறும் காகிதங்களை ஒரு பையில் பண்டலாக கட்டி கொடுத்து கவனத்தை திசை திருப்பி நூதனமாக ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பென்னாகரம் அருகே உள்ள சீலநாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 38) கோபாலாம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (44) ஆகிய இருவரை கைது செய்து, இவர்களிடமிருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை மீட்டிருக்கும் அதியமான் கோட்டை காவல்துறையினா் மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனா்.
இதனையடுத்து கைதாகியுள்ள கிருஷ்ண மூர்த்தி அமமுக நிர்வாகி எனவும், அரசியல் கட்சி கூட்டங்கள், விழாக்களி்ல் எம்.ஜி.ஆர் வேடமணிந்து வலம் வருபவர் எனவும் கூறப்படுகிறது.
ரூபி.காமராஜ்







