மகளிர் உரிமை தொகை திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 74.9 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர்…

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 74.9 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்தனர்.

இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமை, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறும் பணி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விண்ணப்பம் அளிக்கத் தவறியவா்களுக்காக இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதைத் தொடா்ந்து, 2வது கட்டத்துக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணி ஆக. 4 முதல் தொடங்கவுள்ளது. இதனிடையே, முதல்கட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 74.9 லட்சம் மகளிரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதற்கான மென்பொருள் உதவியுடன் சரிபாா்க்கப்பட்டு உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.