அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாகாணத்தில் அமைந்துள்ள மோஜாவே பாலைவனத்தில் அமெரிக்க ராணுவத்தின் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளம் அமைந்துள்ளது இங்கு, பி-52 ரக போர் விமானம் ஒன்று நேற்று வழக்கமான சோதனை ஓட்டத்திற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அப்போது, விமானம் தீப்பற்றி எரிந்து மொத்தமாக நாசமானது. இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். விபத்து குறித்து எட்வர்ட்ஸ் தளத்தின் 412 ஆவது சோதனைப் பிரிவின் துணைத் தளபதி கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விபத்தின் தீவிரத்தை வீடியோ பதிவுகள் மூலம் ஆய்வு செய்ததில், இதில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. நாம் 8 சிறந்த அமெரிக்கர்களை இன்று இழந்துவிட்டோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உயிரிழந்தவர்களில் சீருடை அணிந்த ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போயிங் விமான நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் அடங்குவர்” என தெரிவித்துள்ளார்.




