“ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்” – நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு!

“ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார்.  அவரையும் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை காண அழைக்கலாம்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை…

“ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார்.  அவரையும் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை காண அழைக்கலாம்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொழுது எனக்கு பேசுவதற்கு பேச்சு வரவில்லை.  இதனை பார்க்கும் பொழுது நான் கண் கலங்கினேன்.  பல்வேறு மனித உருவம் அருகில் கருணாநிதி இருப்பது போல் அவருடைய புகைப்படம்.  அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.  என்னை அன்பாக பார்த்த ஒரு மனிதன் அவர்.

அவர் அதிகமாக இலக்கியம், புரிதல் கொள்கைகளைப் பற்றி பேசுவார்.  நான் அவருடன் இரண்டு வருடம் பழகிய காட்சிகளை விட அதிகமான காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. அவர் பின்பற்றிய கொள்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்பற்றி வருகிறார்.  அவர் இன்னும் உயிருடன் இருப்பது போல் இந்த புகைப்படக் கண்காட்சி விளங்குகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் எவ்வளவு பேர் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.  தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று விட்டது.  இனிமேல் நாங்கள் தமிழ்நாட்டைப் பற்றி கவலை பட மாட்டோம்.

பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடி செய்துவிட்டார்.  ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மாதான் இருப்பார். அவரையும் இந்த கண்காட்சியை காண அழைக்கலாம்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.