மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியின் உண்மையான முகம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே மாநில மக்களுக்குத் தெரிந்திருந்தால், மக்களால் நிச்சயம் அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பார் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மற்றும் அசாமில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், “உங்களது உண்மையான முகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு காட்டியிருந்தால் மாநிலத்தின் மக்கள் உங்களை முதல்வராகத் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். உங்கள் விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். கூடிய விரைவில் மாநிலத்தில் மாற்றம் வர உள்ளது. இனியும் உங்கள் ஊழல் ஆட்சி தொடராது” என்று மமதாவை விமர்சித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “நீங்கள் என் தலை மீது வேண்டுமானாலும் உங்கள் கால்களை வைத்து அழுத்தலாம், ஆனால், மாநில மக்களின் கனவுகளை அழுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்” என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கு வருகின்ற மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதிவரை, 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதுபோல் அசாமின் 128 தொகுதிகளுக்கு மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.