முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்க பயன்படுத்தப்படும் பெகாஸஸ் செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய அரசின் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், இது தற்செயலானது அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இந்திய ஜனநாயகத்துக்கும், அதன் அமைப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சி இது என்றும் விளக்கம் அளித்தார். செல்போன்களை ஆய்வு செய்யாமல் இதுகுறித்து முடிவுக்கு வர முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலக அரங்கில் இந்தியாவை களங்கப்படுத்தும் நோக்கில் பெகாசஸ் விவகாரம் வெளியாகியுள்ளது என்றும் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளின் சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையைத் தடம் புரளவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.







