மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை வனத்துறையினர் கண்காணித்து வனத்தினுள்
அனுப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான
சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்களால் “பாகுபலி” என
அழைக்கப்படும் காட்டு யானை நடமாட்டம் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது.
தினசரி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இந்த பாகுபலி யானை சமயபுரம் கிராமத்தில் நுழைந்து ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனத்திற்குள் சென்று
வருகிறது. கடந்த ஒரு மாதமாக பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அந்த யானையை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் விடியற்காலை கல்லார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி சமயபுரம் கிராமத்தினுள் புகுந்து சாலையில் செல்லத் தொடங்கியது. இதுவரை இரவு நேரத்தில் நடமாடி வந்த யானை பாகுபலி இன்று விடிந்த பிறகு எவ்வித அச்சமும் இன்றி நீண்ட தந்தங்களுடன் ஒய்யாரமாக சாலையில் நடந்து வந்தது.
தொடர்ந்து காலை மாலை என இரண்டு வேலைகளில் இந்த யானையைக் கண்காணித்து யானை சாலையை கடக்க உதவி புரிந்து வரும் மேட்டுப்பாளையம் வனத்துறையினர், பாகுபலி காட்டு யானையை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்தனர்.
——-ரெ.வீரம்மாதேவி







