ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்

ஆக்ஸிஜன் கொண்டு செல்ல கிரையோஜெனிக் டேங்கர்கள் டெல்லி அரசுக்குத் தேவை என்று டெல்லி அரசின் குடும்பநலத்துறைச் சார்பில் உருக்கமான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும்…

ஆக்ஸிஜன் கொண்டு செல்ல கிரையோஜெனிக் டேங்கர்கள் டெல்லி அரசுக்குத் தேவை என்று டெல்லி அரசின் குடும்பநலத்துறைச் சார்பில் உருக்கமான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் இதுவரை 1,69,60,172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,92,311 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தினந்தோறும் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி டெல்லி அரசின் குடும்பநலத்துறைச் சார்பில் உருக்கமான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் ‘உங்களிடமோ, அல்லது உங்கள் நிறுவனத்திடமோ ஆக்சிஜன் கொண்டு செல்ல கிரையோஜெனிக் டேங்கர்கள் இருந்தால் டெல்லி அரசுக்குத் தந்து உதவிடுங்கள். இது உயிர்காக்கும் உதவி. இந்த உதவிக்காக டெல்லி என்றும் நன்றியுடன் இருக்கும்.’ என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரமானது தமிழ் நாளேடுகளில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.