விவசாயக் கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றி பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூரில் உள்ள விதை நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டதோடு, விவசாயிகளுக்கு குறுவை நெல் சாகுபடி தேவையான இடுபொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருவாரூர் மாவட்டத்தில் ஆறு வாய்க்கால் தூர்வாரும் பணி 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் 7.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் தற்போது விவசாயக் கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்ற தகவலையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கு நிலங்களை தயார்ப்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் இவ்வாறான தகவலை தெரிவித்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.







