ஐஐடி மெட்ராஸில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் அமெரிக்காவின் பெர்க்லி பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறார். இந்த நிலையில் 22 வயதாகும் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை கடந்த சில நாட்களாக காணவில்லை. இது தொடர்பாக பெர்க்லி காவல் துறையானது விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல் போன சாகேத் ஸ்ரீனிவாசய்யாவின் சடலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் மீட்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை தூதரகம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் மரணமடைந்த உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் உட்பட குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் தயாராக உள்ளது. எங்கள் தூதரக அதிகாரிகள் குடும்பத்தினருடன் நேரடி தொடர்பில் உள்ளனர், மேலும் தேவையான அனைத்து சம்பிரதாயங்கள் மற்றும் சேவைகளிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







